Charles Santiago |
ஜனநாயகமும் நஜிப்பின் மாயாஜாலமும், சார்ல்ஸ் சந்தியாகு Posted: 18 Sep 2011 10:25 PM PDT மூலம் :- செம்பருத்தி Friday, September 16, 2011 3:55 pmஆஹா, ஒஹோ என்று பாராட்ட மாட்டேன். இப்போதைக்கு அப்படிச் செய்ய முடியாது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை (ISA) ரத்துச் செய்வதாக அறிவித்ததை வரவேற்கிறேன். ஆனால், ஏதோ பிடி வைத்து பேசுவதுபோல் இருக்கிறது. அதுதான் யோசிக்க வைக்கிறது. அந்த அறிவிப்பு, மக்களுக்கு-ஐஎஸ்ஏ ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்தார்களே அவர்களுக்கு, மக்களின் கெளரவத்தை மதிக்காத அச்சட்டத்தை எதிர்த்தற்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்களே அவர்களுக்கு, அச்சட்டத்துக்கு எதிராக அயராது போராடினார்களே மனித உரிமைப் போராளிகள் அவர்களுக்கு – ஒரு கிடைத்த ஒரு வெற்றியாகும். ஆனால், ஐஎஸ்ஏ-இன் இடத்தில் நஜிப் வேறு இரண்டு புதிய சட்டங்களைக் கொண்டு வருகிறார். அந்தச் சட்டங்களின் அதிகார வரம்பு என்னவென்பது உறுதியாக தெரியவில்லை. விசாரணையின்றி கைது செய்வதற்கு அவை இடமளிக்குமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. "விரிவான ஜனநாயகம்" பற்றி நஜிப் பேசியதைக் கேட்ட வரை எனக்குள் சந்தேகம் துளிர்விட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அரசாங்கம் பயங்கரவாத-எதிர்ப்புச் சட்டம் என்ற பெயரில் அமெரிக்காவின் பேட்ரியோட் எக்ட் ( Patriot Act )போன்ற ஒன்றைக் கொண்டுவர ஆலோசிப்பதுதான் சந்தேகத்துக்கு மேலும் தூபம் போடுகிறது. அமெரிக்காவில் இந்தச் சட்டம், சட்ட அமலாக்கத் துறைகளுக்கு இருந்த கட்டுப்பாடுகளையெல்லாம் அகற்றி ஒருவரின் வணிக, மருத்துவ, நிதி தொடர்பான தரவுப் பதிவுகளை தேடிப்பார்க்கவும், குடிநுழைவுத் துறைக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புள்ளவர்கள் என்ற ஐயம் தோன்றினால், ஐயப்பாட்டுக்குரியவர்களைத் தடுத்து வைக்கவும் திருப்பி அனுப்பவும், பயங்கரவாதத் தரப்புகளுடன் தொடர்பில்லை என்றாலும்கூட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கும் தனிப்பட்டவர்களைக் கண்காணிக்கவும் விரிவான அதிகாரங்களை வழங்கியுள்ளது. சுருங்கக் கூறின், பயங்கரவாதத் தரப்புகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் எவரும் கைது செய்யப்படலாம், நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்படலாம், அரசாங்கத்தின் விருப்பப்படி நீதிமன்றத்தில் நிறுத்திக் குற்றம் சாட்டப்படலாம். பயங்கரவாதம் என்ற சொல்லை வைத்து தனிப்பட்ட ஒருவரின் வாழ்வைச் சீரழிக்கலாம். ஐஎஸ்ஏ-இன்கீழ் உள்துறை அமைச்சருக்கு இதே அதிகாரம் இருந்தது. எனவேதான், மாற்றம் என்று சொல்கிறார்களே அது எங்கே என்றுதான் தேடுகிறேன். அப்புறம், அது என்ன ஊடகச் சுதந்திரம்? எனக்குத் தெரிந்தவரை, ஊடகங்களை அம்னோவும் பாரிசான் நேசனல் அரசாங்கமும் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டுதான் இருக்கும். ஒரு முறைதான் உரிமம் வழங்கப்படும் அதை ஆண்டுக்கு ஆண்டு புதுப்பிக்க வேண்டியதில்லை என்பதெல்லாம் சரிதான். ஆனால், அரசாங்கத்தின் தாளத்துக்கு ஏற்ப ஆடவில்லை என்றால் அந்த உரிமம் பறிக்கப்படலாம். உள்துறை அமைச்சரின் முடிவை எதிர்த்து வழக்காடவும் முடியாது. சொல்லப்போனால், இப்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. ஏனென்றால், உள்துறை அமைச்சரின் முடிவை எதிர்த்துத்தான் வழக்காட முடியாதே. அரசாங்கத்துக்குப் பிடிக்காத வகையில் செய்திகளை வெளியிடும் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் ஒரேயடியாக இழுத்து மூடப்படும் என்பதே இதன் பொருள். பிரதமர், அரச நிந்தனைச் சட்டம், அதிகாரத்துவ ரகசிய சட்டம் போன்றவை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.இவை இரண்டுமே ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துபவை. நஜிப், போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்து மக்கள் ஒன்றுகூடுவதற்கு கூடுதல் உரிமை வழங்கப் போவதாகக் கூறினார். ஆனால், தெரு ஆர்ப்பாட்டங்கள் குறித்து அவர் எச்சரிக்கிறார். அமைதியான பேரணிகள் நடத்த விரும்பினால் அனுமதிக்கு இன்னமும் விண்ணப்பிக்கத்தான் வேண்டும். மலேசியாவை மேலான நிலைக்குக் கொண்டுசெல்ல நஜிப் கொண்டுவந்துள்ள மாற்றங்கள் என்று சொல்லப்படும் இவற்றைப் பாராட்ட நினைத்தாலும் முடியவில்லை. நஜிப், பதவிக்கு வந்த பின்னர் அறிவித்துள்ள துணிச்சலான கொள்கை மாற்றங்கள் இவை. துணிச்சல்மிக்க ஜனநாயகத்தை நோக்கிச் செல்லும் பாதை ஆபத்து நிறைந்தது ஆனாலும் அரசாங்கம் நிலைத்திருக்க அது அவசியமானது என்றும் நஜிப் தம் உரையில் குறிப்பிட்டார். இதிலிருந்து, நஜிப் அவசரமவசரமாக இம்முடிவுகளைச் செய்துள்ளார் என்பது வெள்ளிடைமலை. அடுத்த ஆறு மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு முன்னதாக தமக்கும் அம்னோவுக்கும் ஆதரவு தேடும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். பெர்சே 2.0 பேரணியை அவர் கையாண்ட விதம் சரியில்லை என்பதால் அவரின் செல்வாக்கு சரிந்தது. 2010 ஜூன் மாதம் 72 விழுக்காடாக மதிப்பிடப்பட்டிருந்த அவரது செல்வாக்கின் அளவு அண்மையில் 59 விழுக்காட்டுக்குக் குறைந்ததை மெர்டேகா மையம் மேற்கொண்ட ஆய்வு காட்டியது. மாற்றங்களை அறிவித்த பிரதமருக்கு அடுத்து தம் கட்சியில் உள்ள வலச் சாரிகளைச் சமாதானப்படுத்துவதுதான் பெரிய தலைவலியாக இருக்கும். அதை எப்படிச் சமாளிப்பார் என்பதைக் காண சுவாரஸ்மாக இருக்கும். அவர்கள், இருப்புநிலையில் எந்த மாற்றம் ஏற்படுவதையும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். பிரதமர், தாம் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பாரா அல்லது பல்டி அடிப்பாரா? பெர்சே 2.0 பேரணிக்கு ஒரு விளையாட்டரங்கை ஒதுக்கிக் கொடுப்பதாகக் கூறினார், அந்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. அபத்தமாக பேசி வந்த பெர்க்காசாவுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. பிரதமரின் உரையை மறுபடியும் வாசித்துப் பார்க்கிறேன். அது, ஹெளடினியின் மாயாஜால வித்தையைப்போல்தான் தென்படுகிறது. திட்டவட்டமாக எதையும் புலப்படுத்தாத நிலையில் அது வெறும் பேச்சுத்தான். அம்னோ, நம்பத்தக்கதல்ல. |
You are subscribed to email updates from Charles Santiago To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Tiada ulasan:
Catat Ulasan